செய்திகள்

பார் உரிமையாளர் தற்கொலை: அ.தி.மு.க. பிரமுகர் கைது

Published On 2019-05-31 10:49 GMT   |   Update On 2019-05-31 10:49 GMT
திருப்போரூர் அருகே பார் உரிமையாளர் தற்கொலை சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

மாமல்லபுரம்:

திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வந்தவர் நெல்லையப்பன். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த இவர் திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவரிடம் டாஸ்மாக் பார்களை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நெல்லையப்பன் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் அவர் அளித்த மரண வாக்குமூலம் மற்றும் சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜு, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவர் தலைமறைவாக இருந்தார். காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.

அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு மேலும் சில முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 4 வாரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News