செய்திகள்

சத்தியமங்கலம் பகுதியில் பலத்த மழை- 2  ஆயிரம் வாழைகள் நாசம்

Published On 2019-05-29 12:35 GMT   |   Update On 2019-05-29 12:35 GMT
சத்தியமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் 2  ஆயிரம் வாழைகள் சூறை காற்றால் முற்றிலும் அடியோடு சாய்ந்து விழுந்தது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் விடிய-விடிய பலத்த சூறை காற்றுடன் இடி- மின்னலுடன் மழை கொட்டியது.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு 9.30 மணிக்கு பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து 1½ மணி நேரம் விடாமல் பெய்தது. இதனால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பல இடங்களில் ரோட்டோரம் உள்ள மரங்கள் பலத்த காற்றால் பேயாட்டம் ஆடியது. சட... சட.. வென மரக்கிளைகள் முறிந்தது.

சத்தி-கோவை ரோட்டில் ஒருவேப்ப மரமும் இதேபோல் மேட்டுப் பாளையம் ரோட்டில் ஒரு வேப்ப மரமும் முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சத்தியில் பலத்த காற்றால் 3 மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் சத்தியில் மின்தடை ஏற்பட்டது.

நேற்று இரவு 9 மணிக்கு நகரில் தடைப்பட்ட மின்சாரம் இன்று அதிகாலை 5 மணிக்குதான் வந்தது. விடிய... விடிய... மின்சாரம் இல்லாததால் மக்கள் தூக்கமின்றி மிகவும் அவதிப்பட்டனர்.

கோவை ரோட்டில் சோமசுந்தரம் என்பவரது தோட்டம் உள்ளது. சூறாவளி காற்றால் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த சுமார் 2 ஆயிரம் செவ்வாழை மரங்கள் சூறை காற்றால் முற்றிலும் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதன் சேதமதிப்பு ரூ.2லட்சம் ஆகும்.

பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் சத்தி அருகே உள்ள திம்மையன் புதூரில் பலத்த காற்றால் முகுந்தன் என்பவரது வீட்டின்மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் வீடு சேதம் அடைந்தது.

Tags:    

Similar News