செய்திகள்

டி.எஸ்.பி. அலுவலகம் முன் தீக்குளித்து பார் உரிமையாளர் தற்கொலை

Published On 2019-05-29 00:45 GMT   |   Update On 2019-05-29 00:45 GMT
மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் அ.தி.மு.க. பிரமுகரும், போலீசாரும் பணம் பறித்ததாக குற்றம்சாட்டி முகநூலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மாமல்லபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தவர் நெல்லையப்பன் (வயது 37). நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு சுமதி (30) என்ற மனைவியும், ருஜன்யா (7) என்ற மகளும், கந்தசாமி என்ற ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளது.

இவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கபெருமாள்கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் தண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் மேல்வாடகைக்கு டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று நெல்லையப்பன் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த போலீசாரும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக நெல்லையப்பன் தனது முகநூலில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவில் ஒரு ஓட்டலில் ரூ.30 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்து நிம்மதியாக வாழ்ந்து வந்தேன். பார் மேல் வாடகை எடுத்து நடத்தியதால் இதுவரை என்னிடம் அ.தி.மு.க. பிரமுகர் 7 வருடத்தில் ரூ.19 கோடிக்கும் மேல் மனசாட்சி இல்லாமல் பணம் பறித்துவிட்டார். எவ்வளவு காசு கொடுத்தாலும் அவருக்கு பத்தாது. போதாக்குறைக்கு போலீசாருக்கும் மாதாமாதம் மாமூல் கொடுத்தாக வேண்டும்.

ஒரு நாள் தவறினாலும் பாரை இழுத்து மூடிவிடுவார்கள். ஏண்டா இந்த தொழிலுக்கு வந்தோம் என்று பலமுறை நான் வருந்தி உள்ளேன். தமிழகத்தில் மதுவை ஒழிக்க ஸ்டாலின், வைகோ, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் ஆகிய தலைவர்கள் முன்வர வேண்டும். தமிழகம் முழுவதும் மதுவை ஒழித்தால் 1 கோடி பெண்கள் நிம்மதியாக வாழ்வார்கள். நான் இறப்பதற்கு முன் இப்பதிவை வெளியிடுகிறேன்.

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நெல்லையப்பன் பேசி பதிவிட்டுள்ளார்.

மேலும் அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க வந்த நெல்லையப்பனை போலீசார் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நெல்லையப்பன் மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது தன் தற்கொலைக்கான முழு காரணத்தையும் அவர் நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

டாஸ்மாக் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்தது மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News