செய்திகள்

பள்ளிவாசலில் வெடிகுண்டு வெடிக்கும் - மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

Published On 2019-05-25 09:29 GMT   |   Update On 2019-05-25 09:29 GMT
சீர்காழி அருகே வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம், தைக்கால் பகுதியில் காதர்ரியா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு கடந்த 23-ந்தேதி ஒரு கடிதம் வந்தது. அதனை தபால்காரர் அருகில் உள்ள பிரம்பு விற்பனை கடையில் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

அதனை கடை உரிமையாளர் ஜமாத் தலைவர் முகமது சுல்தானிடம் நேற்று இரவு கொடுத்தார். அதனை பிரித்துப் பார்த்தபோது தைக்கால் பள்ளிவாசலில் இந்த மாதம் இறுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் முகவரியில் ஆச்சாள்புரத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் உள்ளது. மேலும் இந்த கடிதத்தில் 2 பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை ஜமாத் தலைவர் முகமது சுல்தான் கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். இந்த மிரட்டல் கடிதம் வதந்தியை பரப்புவதற்காக எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News