செய்திகள்

புதிய வரலாற்று ஆசிரியர் உருவாகி இருப்பது மகிழ்ச்சி- கமலின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Published On 2019-05-18 07:13 GMT   |   Update On 2019-05-18 07:13 GMT
புதிய வரலாற்று ஆசிரியர் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி என்று கமலின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை:

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அவரின் கருத்து இந்திய அரசியலில் விவாதப் பொருளாகி உள்ள நிலையில் கமல் தனது டுவிட்டரில் நேற்று மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை பதிவிட்டு இருந்தார்.

‘இந்து’ என்ற சொல் முகலாயர் காலத்திற்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டதாகவும் அதனை ஆங்கிலேயர் வழிமொழிந்ததாகவும், மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் மதமாக பின்பற்றுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தமிழகத்தில் உருவாகி உள்ளன. வரலாற்று உண்மையைத் தான் கமல் கூறியுள்ளார் என்று ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கமல் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-


ஏற்கனவே கணக்கு வாத்தியார் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தப்பு தப்பா கணக்கை கூட்டல் செய்பவர். இப்போது அந்த வரிசையில் வரலாற்று ஆசிரியர் கமலும் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விட்டு விட்டு வரலாற்று ஆராய்ச்சிகளை செய்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டுமா?

மக்கள் முன்னேற்றம் பற்றி சிந்திப்பது தான் தலைவர்கள். அதை விட்டு உறுப்படியற்ற வேலைகளை ஸ்டாலினும், கமலும் செய்வது கேலி கூத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News