செய்திகள்

பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

Published On 2019-05-12 15:36 GMT   |   Update On 2019-05-12 15:36 GMT
பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்ற் 2 மாணவர்கள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சி ஆண்டிபாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்த சேமன் மகன் தமிழரசன் (வயது 16),

அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தர். இவரது மாமா காங்கேயம் படியூர் சண்முகத்தின் மகன் பூபதி (18), கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் பூபதி தமிழரசனின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மாலை இருவரும் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது நீச்சல் தெரியாததால் பூபதி தண்ணீர் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற தமிழரசனையும் தண்ணீர் இழுத்து சென்றுள்ளது.

இதனை பார்த்த அப்பகுதியில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இது குறித்து பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறு வர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார்3 கி.மீ. தூரத்தில் உள்ள சேமலை கவுண்டன்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் சிறுவர்களின் சடலங்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவிநாசி பாளையம் போலீசார் மீட்டனர். இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து அவி நாசிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது.

எனவே பொதுமக்கள் வாய்க்காலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவிநாசிபாளையம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News