செய்திகள்
பொம்மிடியில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அமீர்பாய் காலனியை சேர்ந்தவர் ஜியாபுதீன் (வயது35) இவரது மனைவி சபீனா (30). இவர்களுக்கு பக்ருதீன் என்ற மகன் உள்ளார். ஜியாபுதீன் மோட்டார் மெக்கானிக்காக உள்ளார்.
இவர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்று விட்டார். இவரது மனைவியும், மகனும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இன்று காலை அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டும், பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
பீரோவில் இருந்த 1 லட்சத்து 67 ஆயிரம் ரொக்க பணம் மூன்றே கால் பவுன் நகைகள், ஒன்னேகால் கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளைடிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் சேகர் என்பவர் வீட்டில் இருந்து ரூ.9 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். கொள்ளை நடந்த ஜியாபுதீன் வீடு மலைஅடி வாரத்தில் ஒதுக்குபுறமாக உள்ளது. அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும்.
இதை யாரோ திட்டமிட்டு நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.