செய்திகள்

திருப்பத்தூர் அருகே மஞ்சு விரட்டு - மாடுகள் முட்டியதில் 2 பார்வையாளர்கள் பலி

Published On 2019-04-25 12:23 GMT   |   Update On 2019-04-25 12:23 GMT
திருப்பத்தூர் அருகே இன்று நடந்த மஞ்சு விரட்டில் மாடுகள் முட்டித் தள்ளியதில் 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் மாணிக்கநாச்சியம்மாள் கோவில் உள்ளது.

இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று காலை மஞ்சு விரட்டு நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை பார்வையிட்டனர்.

இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மஞ்சுவிரட்டின்போது காளைகள் தொழுவத்தில் அவிழ்த்து விடப்படுவது வழக்கம். இதற்கு மாறாக காளைகள் இன்று கண்டர மாணிக்கம் கண்மாயில் அவிழ்த்து விடப்பட்டன. இதனால் காளைகள் ஆங்காங்கே சிதறி ஓடி கண்மாய்களில் குவிந்திருந்த பார்வையாளர்கள் மீது முட்டித்தள்ளியது.

இதில் அமராவதி புதூரைச்சேர்ந்த சேவுகன் (வயது 48), வலையபட்டி ராசு (23), அழகாபுரி சின்னசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே சேவுகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வலையபட்டி ராசு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அழகாபுரி சின்னசாமி கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த மஞ்சு விரட்டில் 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மஞ்சுவிரட்டின் போது பார்வையாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News