செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு பழிக்குப்பழி கருத்தை எந்த மதமும் போதிக்கவில்லை- வைகோ அறிக்கை

Published On 2019-04-25 10:10 GMT   |   Update On 2019-04-25 10:10 GMT
இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்களை எந்த மதமும் போதிக்கவில்லை என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #vaiko #srilankablasts

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்கள், மனித நேயம் மனம் கொண்டோரைப் பதைபதைக்கச் செய்து இருக்கின்றது.

359 பேர்களைப் பலி வாங்கி இருக்கின்ற இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்று இருக்கின்ற ஐ.எஸ் அமைப்பு, நியூசிலாந்து நாட்டில் மசூதி மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றது.

யாரோ ஒரு இனவெறியன் செய்த தவறுக்காக, எந்தக் குற்றமும் செய்யாத பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உற்றார், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.

நியூசிலாந்து தாக்குதலை யாரும் ஆதரிக்கவில்லை. உலகமே கண்டித்து இருக்கின்றது. பழிக்குப் பழி என்ற கருத்தை எந்த மதமும் போதிக்கவில்லை. அனைத்து மதங்களும், அன்பையும், அறத்தையுமே வலியுறுத்துகின்றன.


உலக அரங்கில் மாறி வருகின்ற அரசியல் சூழ் நிலைகள் கவலை அளிக்கின்றன. மனித உரிமைகளை வலியுறுத்துகின்ற ஐரோப்பாவின் பல நாடுகளில், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், வெள்ளை இனவெறியை வளர்க்கும் வலதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து இருக்கின்றன. அங்கேயும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகி இருக்கின்றன.

ஐ.எஸ். போன்ற வன்முறை இயக்கங்கள், இந்தியாவிலும் தாக்குதல் நடத்துகின்ற சூழல் உருவாகி இருக்கின்றது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய பெருந் தகைகளின் வழிகாட்டுதலில், திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட தமிழகத்திலும், சாதி மத வெறிப் பேச்சுகள் பெருகி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இத்தகைய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது.

சாதி, மத மோதல்களால் பாதிக்கப்படுவோர் அப்பாவிப் பொதுமக்கள்தான். வேற்றுமைகளை மறந்து, எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம்.

இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.  #vaiko #srilankablasts

Tags:    

Similar News