செய்திகள்

மயிலாடுதுறை அருகே லோடு ஆட்டோ வாய்க்காலில் கவிழ்ந்து அதிமுகவினர் 3 பேர் பலி

Published On 2019-04-12 06:12 GMT   |   Update On 2019-04-12 06:12 GMT
மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அருகே வாய்க்காலில் லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் அ.தி.மு.க.வினர் 3 பேர் பலியானார்கள்.
குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் மங்கநல்லூரில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

இதேபோல் கந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு லோடு ஆட்டோவில் தங்கள் ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற வேன் இரவு 10.30 மணி அளவில் மங்கநல்லூர்-கோமல் சாலையில் உள்ள அனந்தநல்லூர் என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த கந்தமங்கலத்தை சேர்ந்த விநாயகராஜா (வயது 45), சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த அருள்தாஸ் (38), தனபால் (55) ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் பலியான 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

இந்த விபத்து குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 3 பேர் பலியான சம்பவத்தால் மங்கநல்லூர் கிராமமே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.

Tags:    

Similar News