செய்திகள்

மேட்டூர் அருகே தந்தையை கொல்ல கூட்டாளிகளை ஏவிய மகன் கைது

Published On 2019-04-10 11:59 GMT   |   Update On 2019-04-10 11:59 GMT
மேட்டூர் அருகே சொத்து தகராறில் தந்தையை கொல்ல கூட்டாளிகளை ஏவிய மகனை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக் கூடல் ஆண்டிக்கரையை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 52). இரும்பு கம்பி மொத்த வியாபாரி. இவரது மகன் அரவிந்த் (26).

இவர் தனது தந்தை கலைவாணனிடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அதற்கு அவர் சொத்தை எழுதி தர முடியாது என மறுப்பு தெரிவித்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்த் தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் நேற்று கலைவணனின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை தீர்த்துக்கட்ட கத்தி, வெடிகுண்டுகளுடன் காரில் இருந்து இறங்கினர். அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். இதை பார்த்ததும் அரவிந்த், தனது கூட்டாளிகளுடன் காரில் தப்பி சென்று விட்டார்.

இது குறித்து கலைவாணன் கருமலைக் கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காம்பவுண்ட் சுவர் அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த காரை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். இதில் 2 பேர் மட்டும் போலீசாரின் பிடியில் சிக்கினர். அவர்கள் அரவிந்தின் கூட்டாளிகளான முருகன் (39), கோவிந்தராஜ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து காருக்குள் இருந்து 3 வீச்சு அரிவாள்கள், 4 கத்தி, ஒரு குத்து கம்பி, 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடமிருந்து 7 மூட்டைகளில் போதை குட்கா பொருட்களும், அதை கடத்த பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளி தியாகு ஆகியோரை தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News