செய்திகள்

உரிய ஆவணம் இல்லை என கூறி பாய் வியாபாரியிடம் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

Published On 2019-03-25 18:08 GMT   |   Update On 2019-03-25 18:08 GMT
வேட்டவலம் அருகே பாய் வியாபாரத்தில் ஈடுபட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாததால் அவர் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேட்டவலம்:

வேட்டவலத்தை அடுத்த நாரையூர் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சஜேஸ்பாபு மற்றும் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. சந்தேகமடைந்த பறக்கும் படையினர் அந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ஆவூர் கிராமத்தை சேர்ந்த பாய் வியாபாரி ஜான்பாஷா (வயது 50) இருந்தார். அவர் ரூ.99 ஆயிரத்து 400 வைத்திருந்தார். பாய் வியாபாரம் செய்து விட்டு அதில் கிடைத்த பணத்துடன் திரும்பிக்கொண்டிருப்பதாக அதிகாரிகளிடம் அவர் கூறினார். ஆனால் உங்களிடம் உரிய ஆவணம் இல்லை எனக்கூறி அந்த பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்த பின்னர் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என பறக்கும் படைடயினர் அவரிடம் கூறினர்.

இதேபோல் போளூர் தனி தாசில்தார் சுரேஷ் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் பேட்டை கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக போளூர் நோக்கி வந்த லாரியை அவர்கள் மடக்கி சோதனை செய்தனர்.

அந்த லாரியில் செங்கம் தாலுகா ஓரந்தவாடி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் குப்பன் (வயது 64) வந்தார். நெல் வியாபாரியான அவரிடம் ரூ.70 ஆயிரம் இருந்தது. கேளூரில் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி அவர் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர். அந்த பணம் போளூர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. 
Tags:    

Similar News