செய்திகள்

பவானி அருகே விபத்தில் தந்தை-மகன் பலி

Published On 2019-03-15 10:55 GMT   |   Update On 2019-03-15 10:55 GMT
பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பவானி:

சித்தோடு அடுத்த செல்லப்பம் பாளையம் மேட்டு காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 27). இவரது மகன் சபரி (5). தந்தை, மகன் இருவரும் சித்தோட்டில் நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். இரவு 10 மணி அளவில் கோவை நெடுஞ்சாலை செல்லப்பம்பாளையம் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தங்கராஜ் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்றனர். ரோட்டில் தந்தையும், மகனும் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

மேலும் பொதுமக்கள் அந்த இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை- சேலம் நெடுஞ்சாலையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லசும் விரைந்து சென்று மறியல் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் தடுத்தனர். உடல்களை எடுக்க விடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன. போலீசார் தொடர்ந்து பொதுமக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் ஆவேசத்துடன், ‘‘இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இப்போது 2 உயிர்கள் பறி போய் விட்டது. இந்த இடத்தில் சர்வீஸ் ரோடு போட வேண்டும். மேலும் விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்று கூறினர்.

இதற்கு போலீசார் உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்துக்கும் நெடுஞ்சாலை துறைக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.

இதையொட்டி பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு போக்கு வரத்து சீரானது.

Tags:    

Similar News