செய்திகள்

சேலத்தில் போலீஸ் தாக்கியதால் தள்ளுவண்டி வியாபாரிகள் சாலை மறியல்

Published On 2019-02-25 09:50 GMT   |   Update On 2019-02-25 09:50 GMT
சேலத்தில் போலீஸ் தாக்கியதால் தள்ளுவண்டி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்:

சேலம் ஜாமியா மசூதி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி(வயது40). இவர் அ.ம.மு.க. சிறுபான்மை மாவட்ட இணை செயலாளர். இவர் அந்த பகுதியில் வளையல் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வியாபாரம் செய்வதற்காக காலை தள்ளுவண்டியை வீட்டில் இருந்து கொண்டு வந்தார். அப்போது போலீசார் கடையை இந்த பகுதியில் போட வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. அவர் தள்ளுவண்டியை நகர்த்தும் பகுதி சற்று இறக்கம் என்பதால் சிறிது தாமதமாக வண்டியை தள்ளி அந்த இடத்தை விட்டு சென்றார்.

இதை பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை அடித்து தகாதவார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள சாலையோர கடையை வைத்திருக்கும் வியாபாரிகள் போலீசாரை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே அந்த பகுதிக்கு வந்த உதவி கமி‌ஷனர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வியாபாரிகள் முகமது அலியை அடித்த போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அந்த பகுதியை விட்டு கலைய மறுத்து தொடர்ந்து மறியல் செய்தனர். தெடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் தற்போது முதல்-அமைச்சர் வந்து கொண்டிருக்கிறார். அதனால் தற்போது இந்த பகுதியை விட்டு கலைந்து செல்லுங்கள், முதல்-அமைச்சர் சென்ற பிறகு பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

இதை ஏற்ற வியாபாரிகள் அந்த பகுதியை விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News