செய்திகள்

தமிழக அரசு நடவடிக்கையால் மலேசியாவில் தவித்த தொழிலாளர்கள் மீட்பு

Published On 2019-02-22 11:01 GMT   |   Update On 2019-02-22 11:01 GMT
மலேசியாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 49 தமிழக தொழிலாளர்களை அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் கூறினர்.

சென்னை:

கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் திருநெல்வேலி சங்கரன் கோயில் தாலுக்காவை சேர்ந்த 49 பேர் வெள்ளைத்துரை என்பவரின் தலைமையில் மலேசியாவில், மலேசியத் தமிழர் ஒருவர் நடத்தும் ஏஜெஎம் எனர்ஜி என்ற நிறுனத்தில் தொழிலாளர்களாக கேபிள் பதிக்கும் பணிக்கு சென்றனர்.

அவர்கள் அங்கு சென்ற பிறகுதான் பணிபுரிய வேண்டிய இடம் காட்டுப்பகுதி என்று தெரிந்தது. அங்கு சரியான தங்குமிடம் இல்லை. உணவில்லை, பூச்சித் தொல்லை என பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த இன்னல்களை, நிறுவனத்தின் அதிபருக்கு தெரிவித்த போது, இவர்களை கேவலமாக திட்டியும், மிரட்டியும் உள்ளார்.

இதனால் இந்த 49 பேரும் அங்கிருந்து தப்பி பட்டுகேவ் பகுதிக்கு சென்றனர். இதை அறிந்த மலேசிய அரசு அவர்களை மலாக்காவில் உள்ள அரசு இல்லத்தில் தங்க வைத்தது.

49 தொழிலாளர்களின் நிலை அறிந்த தமிழக அரசு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் அவர்களை தமிழகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுத்தது.

தமிழக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக மலேசிய நிறுவனத்தின் மீது மலேசிய அரசால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் 49 தொழிலாளர்களும் புக்கிட் ஜெலின் இமிகிரேசன் டிடென்சன் முகாமுக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு 3 மாதங்கள் இருந்த பின் தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக விடுவிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 49 பேரையும் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் கூறினர்.

பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை ஊருக்கு அழைத்து செல்வதற்கான வாகன வசதிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

Tags:    

Similar News