செய்திகள்

சாவில் மர்மம் இருப்பதாக மனைவி புகார்- தொழிலாளி பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

Published On 2019-02-17 06:36 GMT   |   Update On 2019-02-17 06:36 GMT
ஓச்சேரி அருகே கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரையடுத்து, பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பனப்பாக்கம்:

ஓச்சேரியை அடுத்த களத்தூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பொன்னையன் (வயது 29), தொழிலாளி. இவரது மனைவி சர்மிளா (21). பொன்னையா கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் களத்தூர் பாலாற்றில் புதைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி சர்மிளா தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இதையடுத்து நேற்று களத்தூர் பாலாற்றில் புதைக்கப்பட்ட பொன்னையாவின் உடலை தோண்டி எடுக்க அவளூர் போலீசார் ஏற்பாடு செய்தனர்.

அதைத்தொடர்ந்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, நெமிலி தாசில்தார் கந்தீர்பாவை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொன்னையாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கு வந்திருந்த அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை நிபுணர்கள் டாக்டர் நரேந்திரகுமார் மற்றும் டாக்டர் கலைச்செல்வி ஆகியோர் பொன்னையாவின் உடல் கூறுகளை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே பொன்னையாவின் சாவில் உள்ள உண்மை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News