செய்திகள்

ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்க தடை இல்லை - சென்னை ஐகோர்ட்

Published On 2019-02-15 08:24 GMT   |   Update On 2019-02-15 10:15 GMT
வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 நிதியுதவி அளிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #specialfinancialassistance #MadrasHC
சென்னை:

தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ம் தேதி 110-வது விதியின்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் , நகர்ப்புற ஏழைகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார்.



இதில் சுமார் 60 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த தொகை இம்மாத இறுதிக்குள் அனைவரது வங்கி கணக்கிலும் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த திட்டத்துக்கு எதிராகவும் பணம் அளிப்பதற்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் முறையீடு செய்தார்.

இன்று இம்மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சில விளக்கங்களை அளித்தார்.

கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலும், மாநிலத்தில் உள்ள 17 தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சுமார் 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக கண்டறிடப்பட்டுள்ளன.

இவற்றில் 32.13 லட்சம் குடும்பங்கள் கிராமப்புறங்களிலும் 23.54 லட்சம் குடும்பங்கள் நகர்புறங்களிலும் வசித்து வருகின்றன. அரசின் இந்த சிறப்பு நிதியுதவியை பெறுவதற்கு தகுதியான குடும்பங்களை கணக்கெடுக்கும் பணியில் 55 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பரிமாற்ற முறையில் இந்த சிறப்பு உதவித்தொகையை அரசு நேரடியாக செலுத்தவுள்ளது என அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இதைதொடர்ந்து, அரசின் இந்த உத்தரவுக்கு தடை கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #specialfinancialassistance #MadrasHC  #BPLfamilies #BPLfamiliesinTN
Tags:    

Similar News