செய்திகள்

வேன் மோதி பலியான மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள்-மாணவர்கள் சாலை மறியல்

Published On 2019-02-08 16:16 GMT   |   Update On 2019-02-08 16:16 GMT
பரமக்குடியில் தனியார் பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவத்தில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், மாணவ-மாணவிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரமக்குடி:

பரமக்குடி பாரதிநகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகள் சாருலதா (வயது 20). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் கல்லூரி பஸ்சில் பரமக்குடிக்கு வந்த இவர் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தனியார் மெட்ரிக் பள்ளி வேன் மோதியதில் சாருலதா படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நேற்று காலை மாணவி சாருலதாவின் உடல் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அங்கு குவிந்திருந்த உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் தனியார் பள்ளி வேன் டிரைவர் செல்போன் பேசியபடி வந்து விபத்தை ஏற்படுத்தியதை கண்டித்தும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவி சாருலதாவின் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் அங்கு வந்த பரமக்குடி தாசில்தார் பரமசிவன், போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மதுரை-பரமக்குடி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சாலை மறியலால் பரமக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பரமக்குடி வருவாய் துறை அலுவலகத்தில் தாசில்தார் பரமசிவன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு மாணவி சாருலதாவின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
Tags:    

Similar News