செய்திகள்

போலீசை தரக்குறைவாக பேசி இணையதளத்தில் வீடியோ வெளியீடு - திருமங்கலத்தை சேர்ந்தவர் கைது

Published On 2019-02-07 10:36 GMT   |   Update On 2019-02-07 10:36 GMT
கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் தற்கொலை தொடர்பாக போலீசாரை தரக்குறைவாக பேசி இணையதளத்தில் வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் (வயது 25) என்பவர் கடந்த 25-ந்தேதி சென்னையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக திட்டியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று ராஜேஷ் வீடியோ பதிவு செய்திருந்தார். இது இணையதளத்தில் பரவியது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இணைய தளத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பேசிய ஒரு வாலிபர் ராஜேஷ் தற்கொலை தொடர்பாகவும் போலீசாரை தரக்குறைவாகவும் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பாரபத்தி தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் செந்தில் (23) என்பவர்தான் போலீசாரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். இவர் கார் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News