செய்திகள்

மெரினா கடலில் மூழ்கிய 3 மாணவர்களும் பலி

Published On 2019-02-03 16:07 IST   |   Update On 2019-02-03 16:07:00 IST
மெரினா கடலில் குளிக்கும் போது மூழ்கிய 3 மாணவர்கள் உடல் கரை ஒதுங்கியது. மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

தாம்பரம்:

சேலையூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 14). இவர் தாம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மதியம் உடன் படிக்கும் கிண்டியை சேர்ந்த வினோத் குமார் (14), சென்னை எம்.ஜி. ஆர். நகரை சேர்ந்த சதீஷ் (14) உள்பட 10 பேருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர் அனைவரும் கலங்கரைவிளக்கம் அருகே குளித்தனர்.

அப்போது ராட்சத அலை ஒன்று சதீஷ், செந்தில்குமார், வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடன் வந்த மாணவர்கள் காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை.

கடலில் மூழ்கிய 3 பேரையும் கடலோர காவல் படை உதவியுடன் மெரினா போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாணவர் செந்தில்குமார் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரையிலும், சதீசின் உடல் திருவான்மியூர் கடற்கரையிலும், வினோத் குமாரின் உடல் நீலாங்கரை கடற்கரையிலும் பிணமாக கரை ஒதுங்கியது. 3 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

பலியான 3 மாணவர்களும் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு மதியத்திற்கு பின்னர் நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்து உள்ளனர்.

அப்போது அவர்கள் ஆபத்தான இடத்தில் கடலில் குளித்ததால் தண்ணீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதற்கிடையே எச்சரிக்கையை மீறி சிறுவர்கள் கடலில் குளித்ததால் அவர்களுடைய பெற்றோர் மீதும், பள்ளி மாணவர்கள் குளித்தால் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் அவர்களது பெற்றோருக்கு ஆசிரியர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

Similar News