செய்திகள்

திருமானூர் அருகே போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகை

Published On 2019-02-02 16:25 GMT   |   Update On 2019-02-02 16:25 GMT
திருமானூர் அருகே போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகையிட்டனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் கீழப்பழுர் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழகொளத்தூர் கிராமம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்வர்மா (வயது 22), சித்திரவேல்(22), கார்த்திக் (23) மற்றும் அவர்களது நண்பர்கள் ஊரின் கடைவீதியில் நின்றிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த விஜய்(19), ராகுல்(22) ஆகியோர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். 

இதையடுத்து ஏன் இவ்வளவு வேகமாக செல்கின்றீர்கள் என ராஜேஸ்வர்மாவும், சித்திரவேலும் கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 இந்தநிலையில் கீழப்பழுர் போலீசார் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜேஸ்வர்மா தரப்பினர் மீது மட்டும் வழக்குபதிந்து, அவர்கள் தரப்பினர் சிலரை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வர்மா தாப்பினர்,  அம்பேத்கர் நகர் பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமானூர் ஊராட்சி ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர் நல்லத்தம்பி, மாநில துணை செயலாளர் அன்பானந்தம், அரியலூர் தொகுதி செயலாளர் மருதவாணன், துணை செயலாளர் பாலமுருகன், உள்ளிட்டோர் கீழப்பழுர் போலீசாரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து அரியலூர் போலீஸ் டி.எஸ்.பி., மோகன்தாஸ் போராட்டகாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சம்பவம் நடந்த இருதரப்பினர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News