செய்திகள்

செங்கல்பட்டு அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை

Published On 2019-02-02 14:50 IST   |   Update On 2019-02-02 14:50:00 IST
செங்கல்பட்டு அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே உள்ள வில்லியம்பாக்கத்தை சேர்ந்தவர் முத்து. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

சில தினங்களுக்கு முன்பு முத்து தனது குடும்பத்துடன் சோழிங்கநல்லூரில் இருக்கும் மகன் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் இன்று காலை வில்லியம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி.டி.வி. ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

செங்கல்பட்டு அடுத்துள்ள நெம்மேலியில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல், அங்குள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதை கண்டு கூச்சலிட்டனர்.

அப்போது, அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த போலீசார், கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். இதில் ஒரு கொள்ளையன் போலீசாரிடம் சிக்கினான். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News