மத்தியில் மோடி இல்லாத ஆட்சியை உருவாக்குவோம்- வைகோ பேட்டி
ஆலந்தூர்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஆஜர் ஆவதற்காக டெல்லி சென்றேன். இருதரப்பு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு என்ன வேலை செய்ய வேண்டுமோ அத்தனை வேலையையும் தமிழக அரசு செய்துள்ளது. 13 பேர் படுகொலை செய்யப்பட்டதால், மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.
ஏற்கனவே ஸ்டெர்லைட் தொடர்பான 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை கூட தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வில்லை. இப்போது அவற்றை இந்த வழக்குடன் சேர்த்துவிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அதற்கு தமிழக அரசு தான் முழு காரணமாக இருக்கும். என்னை ஸ்டெர்லைட் நிர்வாகம் சந்திக்க முயற்சி செய்தது. அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை. எனவே, என் மீது அவர்கள் கோபமாக இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க முயற்சி செய்கிறது.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அகற்றப்பட வேண்டும். மத்தியில் மோடி இல்லாத, ஆட்சியை உருவாக்குவோம்.
இவ்வாறு வைகோ கூறினார். #vaiko #pmmodi #sterliteplant