செய்திகள்

ஆரோக்யா பால் விலை 2 ரூபாய் உயருகிறது

Published On 2019-01-31 12:55 IST   |   Update On 2019-01-31 12:55:00 IST
ஆரோக்யா பால் விலை நாளை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயருகிறது. இதனால் பால் சார்ந்த உணவு பொருட்களின் விற்பனை விலை உயரும் என கூறப்படுகிறது. #ArokyaMilk
சென்னை:

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலுக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் விற்பனையாவது ஆரோக்யா பால் ஆகும்.

இப்போது இதன் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மற்ற பால் பாக்கெட் விலையும் விரைவில் உயர்ந்து விடும்.

இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனமான “ஹட்சன் நிறுவனம் நாளை வெள்ளிக்கிழமை (1-ந்தேதி) முதல் தங்களுடைய “ஆரோக்யா” பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2,00 ரூபாய் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான இந்த விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் நாளொன்றுக்கு தேவைப்படக் கூடிய 1.5 கோடி லிட்டர் பாலில் பொதுமக்கள் மற்றும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அனைத்தும் சுமார் 83.4 சதவீதம் பால் தேவைகளுக்கு (அதாவது 1 கோடியே 25 லட்சம் லிட்டர்) தனியார் பால் நிறுவனங்களையே சார்ந்திருக்கும் சூழல் உள்ளது. ஏனெனில் ஆவின் நிறுவனம் தமிழகத்தில் நாளொன்றுக்கு வெறும் 16.6 சதவீதம் பால் தேவைகளை மட்டுமே (அதாவது சுமார் 25 லட்சம் லிட்டர்) பூர்த்தி செய்கிறது.

அது மட்டுமின்றி சுமார் 95 சதவீதம் தேனீர் கடைகள், உணவகங்கள் தனியார் பாலினையே உபயோகப்படுத்தி வருவதால் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வின் காரணமாக தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலையும் கடுமையாக உயரும்

எனவே ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கின்ற வகையிலான இந்த பால் விலை உயர்வை ஹட்சன் நிறுவனம் மறு பரிசீலனை செய்து அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ArokyaMilk
Tags:    

Similar News