செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் 97 பேர் கைது

Published On 2019-01-26 12:29 GMT   |   Update On 2019-01-26 12:29 GMT
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #JactoGeo
சேலம்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தில் 4-வது நாளான நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் நேரு கலையரங்கில் அடைத்து வைத்தனர்.

மாலை 6 மணிக்கு மேல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நபர்களை மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற ஊழியர்கள் தங்களையும் கைது செய்யுமாறு கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ஆசிரியர்களின் உறவினர்களும் கலையரங்கம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் இன்று அதிகாலை 1 மணியளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளான கோவிந்தன், சிங்கராயன், உதயகுமார், பாரி, ராஜேந்திரன், சந்திரசேகர், முத்துக்குமாரன், சுரேஷ், ராஜேஷ், ஸ்ரீராம், லெனின், லோகு உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் அவர்களை சேலம் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் வீட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவாரா, அல்லது விடுவிப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல நாமக்கல்லில் பூங்கா சாலையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் 72 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை மாஜிஸ்திரேட் வருகிற 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள். #JactoGeo
Tags:    

Similar News