செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 30 பேர் இரவில் கைது

Published On 2019-01-26 15:37 IST   |   Update On 2019-01-26 15:37:00 IST
ஈரோடு மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்த முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். #JactoGeo
ஈரோடு:

பழைய பென்சன் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் நடத்த சென்ற ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல ஈரோடு மாவட்டத்திலும் சுமார் 3 ஆயிரம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்த முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்ட செயலாளர் சுகுமார் நெடுஞ்சாலை துறை சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மாவட்ட துணை செயலாளர் சிவகுமார், அந்தியூர் ஒன்றிய செயலாளர் நிக்கோலஸ் சகாயராஜ் மற்றும் தங்கராஜ், அண்ணாதுரை, மோகன், அண்ணாமலை உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று குடியரசு தின விழாவையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று பங்கேற்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் ஏற்கெனவே முடிவு செய்திருந்தனர்.

மேலும் குடியரசு தின விழாவை புறக்கணித்தால், ஆசிரியர்கள் மீது ‘17-யு’ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்விதுறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் இன்று பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளில் நடந்த குடியரசு தின விழாவிலும் கலந்து கொண்டனர்.

பல பள்ளிகளில் 4 நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆசிரியர்-ஆசிரியர்களை பார்த்த மகிழ்ச்சியில் அவர்களை மாணவ- மாணவிகள் கைத்தட்டி வரவேற்றனர்.  #JactoGeo
Tags:    

Similar News