செய்திகள்

பிரியங்கா காந்தியின் வருகை கட்சிக்கு பலம் சேர்க்கும் - திருநாவுக்கரசர்

Published On 2019-01-26 08:35 GMT   |   Update On 2019-01-26 08:35 GMT
பிரியங்கா காந்தியின் வருகை கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய பதர்சயீத் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்தார். அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு உடனடியாக மாநில செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:

வருங்காலத்தில் நாட்டை ஆள தகுதியான கட்சி காங்கிரஸ்தான் என்பதை உணர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கு வருபவர்களை வரவேற்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் நடந்துவரும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விட்டுவிட்டு எதிரான நடவடிக்கை எடுப்பது தொழிலாளர் விரோத போக்கு.

கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர் பதவி விலகி குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

பிரியங்கா காந்தி பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு அரசியல் கற்றுக்கொடுக்க வேண்டியது இல்லை. அவரது வருகை கட்சிக்கு பலம் சேர்க்கும். ராகுல் பிரதமர் ஆவதற்கு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் குடியரசு தினவிழா நடந்தது. இதில் திருநாவுக்கரசர் தேசியக்கொடி ஏற்றி வைத்து சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

நிகழ்ச்சியில் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, செல்லகுமார், தணிகாசலம், தாமோதரன், உ.பலராமன், டி.ஏ.நவீன், கஜநாதன், ஜான்சிராணி, அசன் ஆரூண், ரூபி மனோகரன், சிவராஜ சேகர், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், மைதிலிதேவி, எஸ்.கே.நவாஸ், சுமதி அன்பரசு, குங்பு விஜயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தி.நகர் பகுதி காங்கிரஸ் தலைவர் நாச்சிகுளம் சரவணன் தலைமையில் மேற்கு மாம்பலத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாம்பலம் ராஜேந்திரன், டாக்டர் பாண்டியராஜ், தி.நகர் ஜெயராஜ், ராஜசேகர், பாலகிருஷ்ணன், தி.நகர் விக்னேஷ்வரன் கலந்து கொண்டனர். #Congress  #Thirunavukkarasar
Tags:    

Similar News