செய்திகள்

குடியரசு தினம் - தலைவர்கள் வாழ்த்து

Published On 2019-01-25 08:16 GMT   |   Update On 2019-01-25 08:16 GMT
நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Republicday
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றை நமக்கு பெற்றுத்தந்த தேசத் தலைவர்களின் தியாகங்களை என்றென்றும் போற்றி நினைவுகூருவோம். இந்நாளில் மதவாத சக்திகளை ஒடுக்கி, ஜனநாயகத்தைக் காக்க பாசிச, ஊழல், மத்திய-மாநில ஆட்சிகளை வீழ்த்திட புதிய இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் சபதமேற்போம். இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒவ்வொருவரும் முழுமையாக பெறுவதற்கு தடையாக இருப்பது தவறான பொருளாதார கொள்கை, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லாத மனப்பாங்கு ஆகியவைகளே இந்திய தேசமும் இந்திய திருநாட்டு மக்களும் தொட வேண்டிய சிகரத்தை இன்னும் தொடவிடாமல் தடுக்கும் பெரும் தடைகளாக இருந்து வருகின்றன. இத்தடைகள் எல்லாம் இனி உடையட்டும். வளமும், வளர்ச்சியும் பொருளாதார ஏற்றமும் சமூக நல்லிணக்கமும் தழைத்து சிறந்திட குடியரசு தின நன்னாளில் உறுதி ஏற்போம்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

இந்திய தேசத்தின் பெருமைமிகு மாண்பும், வரலாறும் தாங்கி நிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடித்தள ஆணிவேரையும் எந்த சூழலிலும் எவராலும் அசைக்க முடியாது என்பதை இந்தியராகிய நாம் அனைவரும் உறுதியோடு எடுத்துரைக்க வேண்டும். உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியை சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் ஒரே அணியில் திரள வேண்டும். குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

‘‘பாரத நாடு பழம்பெரும் நாடு’’ என்றாலும் பழமையும், புதுமையும் சம விகிதத்தில் கலந்து காணப்படுவதால், வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து இந்திய கலாசாரத்தை கண்டு அதிசயித்து தங்களை அக்கலாசாரத்தில் இணைத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்.ஆர்.தனபாலன்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் குடியரசு தின வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். #Republicday


Tags:    

Similar News