செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்

Published On 2019-01-22 05:50 GMT   |   Update On 2019-01-22 05:50 GMT
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. #JactoGeo

சென்னை:

ஜாக்டோ-ஜியோ எனும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

2 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தினார்கள்.

இதை ஏற்று அரசு நியமித்துள்ள வல்லுனர் குழு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.

அதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு அரசிடம் இருந்து வரும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரையில் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் போராட்டத்தை முன் எடுத்து செல்ல முடிவு செய்தனர்.

திட்டமிட்டப்படி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என அறிவித்ததோடு போராட்டத்தில் குதித்தனர்.

பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.


யார்-யார்? பணிக்கு வந்துள்ளார்கள் என்ற விவரங்களை பள்ளிகளும், அரசு அலுவலக துறை அதிகாரிகளும் கணக்கெடுக்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் “பணியில்லை ஊதியமும் இல்லை” என்ற கொள்கையின்படி சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதை மீறி இன்று முதல் அவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

25-ந்தேதி வரை 4 நாட்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். முதல் நாளான இன்று அனைத்து தாலுகா அளவில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

பணிக்கு செல்லாத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அரசு அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாளை 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களும் தாலுகா தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. 25-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 150 சங்கங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால் அரசு துறையின் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குறைந்த அளவில் ஆசிரியர்கள் வருகை தந்தனர்.

தற்போது தேர்வு காலம் தொடங்க இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசு அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் பள்ளிகள் மூடப்படாமல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு அலுவலகங்கள் நிறைந்த எழிலகம், குறளகம், பனகல் மாளிகை போன்றவற்றில் அரசு ஊழியர்கள் குறைந்த அளவில் பணிக்கு வந்திருந்தனர்.

ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் தலைமையில் எழிலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஜாக்டோ-ஜியோவின் வேலை நிறுத்தம் ஒருபுறம் நடைப்பெற்றாலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் ஒரு பிரிவினர் பணிக்கு சென்றனர். என்.ஜி.ஓ. சங்கம், தலைமை செயலக சங்கம், அலுவலக உதவியாளர் சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.

தலைமை செயலகத்தில் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். #JactoGeo

Tags:    

Similar News