செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் சிறையில் அடைப்பு

Published On 2019-01-21 11:17 GMT   |   Update On 2019-01-21 11:17 GMT
ஊட்டி அரசு கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை:

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாக உயர் கல்விதுறைக்கு தொடர்ச்சியாக புகார் சென்றது.

புகாரின் அடிப்படையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களின் பணி பதிவேடு, சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை தன்மை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.

மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இதனை ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனைவர் பட்டம் முடித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்கள் மீது ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியாவிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் போலி சான்றிதழ் சமர்ப்பித்த நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News