செய்திகள்

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும்: அரசு எச்சரிக்கை

Published On 2019-01-21 05:43 GMT   |   Update On 2019-01-21 09:10 GMT
நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. #JactoGeo
சென்னை:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 150 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

இவர்களது போராட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

அதன் பின்னரும் அரசு கோரிக்கைகள் பற்றி இதுவரை எந்தவிதமான முடிவையும் தெரிவிக்காததால் கோர்ட்டில் கொடுத்த உத்தரவை ஜாக்டோ- ஜியோவினர் திரும்ப பெற்றதோடு மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் 22-ந்தேதி முதல் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

திருச்சியில் நடந்த உயர்மட்ட குழுவில் தொடர் போராட்டம் குறித்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டனர்.

அதன்படி நாளை 22-ந்தேதி தமிழகம் முழுவதும் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 23 மற்றும் 24-ந்தேதி மறியல் போராட்டமும், 25-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

26-ந்தேதி குடியரசு தினத்தன்று அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்து சென்னையில் கூடி முடிவு செய்து அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நாளை முதல் தொடங்குவதால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த போராட்டத்தில் ஒரு பிரிவினர் கலந்து கொள்ளவில்லை.


என்.ஜி.ஒ. சங்கம், தலைமை செயலக சங்கம், ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் பங்கேற்காததால் ஜாக்டோ- ஜியோவின் வேலை நிறுத்தம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போராட்டம் தொடங்கிய பிறகுதான் தெரியும்.

ஆனால் அரசுக்கு எதிராக நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் முதல் நாளில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெறும் மறியல் போராட்டங்களில் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வார்கள் என்று ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்துத்துறை செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 22-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

வேலை நிறுத்தம் செய்வது அல்லது வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது அல்லது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, போராட்டங்களில் கலந்து கொள்வது மற்றும் அரசு அலுவலகங்களில் தினசரி பணிகள் பாதிக்கும் வகையில் செயல்படுவது ஆகியவை தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதி 1973 பிரிவுகள் 20, 22, 22ஏ ஆகியவற்றின் கீழ் சட்ட விதி மீறலாகும்.

தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதியின்கீழ் வேலை நிறுத்தம் செய்வதற்கு எந்தவித தார்மீக உரிமையோ சட்டபூர்வ உரிமையோ கிடையாது. சுப்ரீம்கோர்ட்டு இது தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பில் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் அன்றைய சம்பளம் கேட்பதற்கு உரிமை இல்லை என்று கூறி உள்ளது.

எனவே உங்களது துறையில் உள்ள அரசு ஊழியர்களிடம் நடத்தை விதிகளை மீறக்கூடாது என்று உத்தரவிட கேட்டுக் கொள்கிறேன். நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

நாளை தொடங்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் யாராவது கலந்து கொண்டு அலுவலக பணிகளை புறக்கணித்தால், அவர்கள் வராதது அங்கீகாரம் இல்லாத ஒன்றாக கருதப்படும்.

இதன் அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் “நோ ஒர்க் நோ போ” என்ற கொள்கை அடிப்படையில் அவர்களுக்கு எந்த சம்பளமும் வழங்கப்படமாட்டாது. போராட்ட நாட்களில் அவர்களுக்கு உரிய படிகளும் வழங்கப்படமாட்டாது.

ஆகையால் அரசு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மீறும் பட்சத்தில் பணியாளர்கள் சட்டப்பிரிவு 17(பி)கீழ் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மருத்துவ விடுப்பை தவிர அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் வேறு எந்த விடுப்பும் கிடையாது. தினக் கூலி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நிறுத்தப்படுவார்கள்.

மருத்துவ விடுப்பு எடுப்பவர்கள் அதற்குரிய சரியான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவத்துறையின் உரிய சான்றிதழ் இல்லாமல் விடுப்பு எடுப்பதை அனுமதிக்க இயலாது.

போலி மருத்துவ சான்றிதழ்கள் கொடுத்து நாளை விடுப்பு எடுப்பது தெரிந்தால் அவர்கள் மீது அரசு ஊழியர்கள் நடத்தை விதியின் கீழ் மிக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது சம்பளமும் ரத்து செய்யப்படும்.

வேலை நிறுத்தத்தை கருத்தில் கொண்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் அமைப்புகளில் இயல்பு நிலை நிலவ துறை தலைவர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் உரிய மாற்று ஏற்பாடுகளையும் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

நாளை காலை 10.15 மணிக்குள்ளாக பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகவல்களை கிராமம், தாலுகா, மாவட்ட அளவில் சேகரித்து தலைமை செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

நாளை தொடங்கி வேலை நிறுத்தம் முடியும் வரை இந்த தகவல்கள் தினமும் தரப்பட வேண்டும். தலைமை செயலகம் துறைகளில் பணிக்கு வருபவர்கள் பற்றிய வருகை பதிவேடு தகவல்களை அந்தந்த துறை தலைவர்கள் 10.30 மணிக்குள் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு அளிக்க வேண்டும்.

இந்த வருகை பதிவேடு தகவல்களை தவிர வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களின் தகவல்களை தனியாக தினமும் மதியம் 12 மணிக்குள் தர வேண்டும். அதன் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். #JactoGeo
Tags:    

Similar News