செய்திகள்

மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்: கனிமொழி

Published On 2019-01-19 02:27 GMT   |   Update On 2019-01-19 02:27 GMT
மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று தூத்துக்குடி அருகே நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #Kanimozhi #DMK
தூத்துக்குடி :

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலையில் குளத்தூர் ரோட்டில் உள்ள மைதானத்தில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று மாலை நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

மக்கள் அடிப்படை வசதிகள், பள்ளிக்கூடம், மேம்பாலம் வசதி உள்ளிட்ட பல பிரச்சினைகளை இங்கு எடுத்து வைத்தனர். இந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், நம் பிரச்சினைகளை எடுத்து சொல்லக்கூடிய அளவில் தலைவர்கள் இருந்து இருப்பார்கள். அவர்கள் அந்த பிரச்சினைகளை சரிசெய்து தந்து இருக்க முடியும். ஆனால் அ.தி.மு.க. அரசு தேர்தல் வைத்தால் வெற்றிபெற மாட்டோம் என்று தெரிந்து, தேர்தல் நடத்துவது இல்லை.



இந்த அரசாங்கம் மக்களை பற்றி, மக்கள் பிரச்சினை பற்றி கவலைப்படக்கூடிய அரசாங்கமாக இல்லை. விரைவில் தேர்தல் வரும். பாராளுமன்ற தேர்தலும், சில நேரத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வந்தாலும் வரும். நமக்கு நல்லவழி கிடைப்பதற்கு அதுதான் வழியாக இருக்கும். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரும். நீங்கள் வைத்து இருக்கும் அத்தனை கோரிக்கைகளையும் நிச்சயமாக விரைவில் நிறைவேற்றி தருவோம்.

தேர்தல் வரும் போது நமக்கு நல்லதை செய்யக்கூடிய ஆட்சி எது, யாருடைய ஆட்சி வந்தால் நல்லது நடக்கும். நியாயம் நடக்கும் என்பதை புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். விரைவில் தி.மு.க. ஆட்சி வரும். அப்போது அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Kanimozhi #DMK
Tags:    

Similar News