செய்திகள்

சீர்காழி அருகே கிராம மக்கள் திடீர் மோதல்- கார்-மோட்டார் சைக்கிள்கள் உடைப்பு

Published On 2019-01-18 13:05 GMT   |   Update On 2019-01-18 13:05 GMT
சீர்காழி அருகே காணும் பொங்கலையொட்டி கிராம மக்கள் திடீரென மோதிக் கொண்டனர். இதில் கார்-மோட்டார் சைக்கிள்கள் உடைக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தாண்டவன் குளத்தை சேர்ந்த பெரியசாமி மகன் அருண், தர்காஸ் பகுதியை சேர்ந்த ஹரி, அவரது தம்பி வெங்கடேசன் உள்பட சிலர் காணும் பொங்கலையொட்டி நேற்று மோட்டார் சைக்கிளில் பழையாறு கடற்கரைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் பழையாறு பஸ் நிலையம் அருகே சென்றபோது அப்பகுதயை சேர்ந்த 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பழையாறு வாலிபர்கள் எதிர்ப்பை மீறி தர்காஸ் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பழையாறு கடற்கரைக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடி விட்டு இரவு 7 மணி அளவில் தங்கள் ஊருக்கு புறப்பட்டு பழையாறு பஸ்நிலையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது பழையாறு பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களும் மீண்டும் தகராறு செய்து 2 மோட்டார் சைக்கிளையும், ஒரு காரையும் உடைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதில் அருண் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இந்த மோதலில் காயமடைந்த ஹரி, வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை எஸ்.பி. விஜயகுமார், சீர்காழீ டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மீனவ கிராமங்களில் மோதலை தடுக்கும் வகையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 30 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

2 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் மோதி கொண்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News