செய்திகள்

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் தரலாம்- ஓபிஎஸ்

Published On 2019-01-14 06:46 GMT   |   Update On 2019-01-14 06:46 GMT
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
சென்னை:

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைக்க உள்ளார்.



இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், அரசியலில் தங்களை நேரடியாக எதிர்க்க முடியாத சக்தியற்ற எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக கூறினார்.

“கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஓபிஎஸ் எச்சரித்தார்.

தேர்தல் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம் என்றும், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என்றும் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
Tags:    

Similar News