செய்திகள்

போடி-கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2019-01-13 12:26 GMT   |   Update On 2019-01-13 12:26 GMT
போடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேசன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிக அளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. அரசு பஸ் எஸ்டேட் தொழிலாளர்கள், மோட்டார் சைக்கிள் மேலும் கழுதைகள் மூலமும் ரேசன் அரிசியை கடத்தி வருகின்றனர்.

உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து சென்று அரிசி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்த போதும் ரேசன் அரிசி கடத்தல் குறையவில்லை. விற்பனையாளர்கள் மொத்தமாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை ஒரு கும்பல் கேரளாவுக்கு கடத்தி வருகிறது.

இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. கலெக்டர் உத்தரவுப்படி போடி தாசில்தார் ஆர்த்தி, போடி வட்ட வழங்கல் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் குழுவினர் பஸ் நிலைய பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

மூணாறு செல்லும் அரசு பஸ்சில் ஒரு நபர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தார். அதிகாரிகள் மற்றும் குழுவினரை பார்த்ததும் அந்த நபர் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றார்.

அதிகாரிகள் அதனை சோதனையிட்ட போது கேரளாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த 200 கிலோ ரேசன் அரிசி என தெரிய வந்தது. ரேசன் மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அவற்றை ஒப்படைத்து தப்பி ஓடிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News