செய்திகள்

தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-01-11 21:56 GMT   |   Update On 2019-01-11 21:56 GMT
தூத்துக்குடி அனல் மின் நிலையம், குடிநீர் தேவை தவிர தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. #SupremeCourt #ThamirabaraniRiver
புதுடெல்லி:

தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலம் தாமிரபரணி ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் தாமிரபரணி ஆற்றின் குடிதண்ணீரை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இதை எதிர்த்து தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எந்த தொழிற்சாலைக்கும் தாமிரபரணி தண்ணீரை வழங்க கூடாது என்றும், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.



பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஜோயல் தரப்பில் மூத்த வக்கீல் அனிதா செனாய் ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் வினோத் கன்னா ஆஜரானார்கள்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ‘ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கும், குடிநீர் தேவைக்கும் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். தாமிரபரணியில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், இந்த வழக்கில் 21-ந்தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SupremeCourt #ThamirabaraniRiver
Tags:    

Similar News