செய்திகள்
சீர்காழியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்

சீர்காழியில் பொங்கல் பரிசுக்காக பலமணிநேரம் காத்திருந்த பொதுமக்கள் - சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Published On 2019-01-10 14:20 GMT   |   Update On 2019-01-10 14:20 GMT
சீர்காழியில் பொங்கல் பரிசுக்காக பல மணிநேரம் வெயிலில் காத்துகிடந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். #Pongal
சீர்காழி

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள 9 ரேசன் கடைகளில் கடந்த 8-ந்தேதி முதல் தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் சர்க்கரை, பச்சரிசி, கரும்புதுண்டு ஆகியவை வழங்கப்பட்டன. அதேபோல் சீர்காழி ரெயில்வே சாலையில் உள்ள கோயில்பத்து கிளை ரேசன் கடையிலும் மொத்தமுள்ள 1103 குடும்ப அட்டைதாரர்களில் 300அட்டைதாரர்களுக்கு பட்டுவாடா செய்து வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்கள் நேற்று காலை 7.30 மணி முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் பெற ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கடையில் பொங்கல் பரிசுப்பொருட்களான பச்சரிசி, சர்க்கரை, கரும்புகள் மட்டுமே இருப்பு இருந்தன.கார்டுதாரர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.1000 பணம் கூட்டுறவு துறையிலிருந்து வழங்கப்படவில்லை. பணம் வந்துவிடும் என பொதுமக்கள் சாப்பிட கூட செல்லாமல் பல மணிநேரம் வரை காத்திருந்தனர். மதியம் 4மணிக்கு பிறகு பணம் வரவில்லை என தெரிந்து பணம் இருப்பு இல்லை என அறிவிப்பு பலகை வைத்துவிட்டு ரேசன்கடை விற்பனையாளர் கடையை மூடி சென்றார். இதனால் பல மணிநேரம் வெயிலில் காத்துகிடந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து சீர்காழி-பணங்காட்டாங்குடி பிரதான சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன்,தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பயனாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்திட பணம் எடுத்துக்கொண்டு வருவாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மீண்டும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.பின்னர் மாலை 6 மணிக்கு மேல் ரேசன் கடைக்கு பணம்வந்ததையடுத்து கார்டுதாரர்களுக்கு தொடர்ந்து பொங்கல் பரிசு பொருட்கள்,ரூஆயிரம் வழங்கப்பட்டது. #Pongal
Tags:    

Similar News