வேலூர்- திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
வேலூரில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர், அகில இந்திய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தினர், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், டாஸ்மாக் அனைத்து தொழிலாளர்கள் சங்கம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பகுதிகளுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள், சரக்கு லாரிகளும் வழக்கம்போல் இயங்கின.
வேலூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மட்டும் தமிழக எல்லையான ஓசூர் வரை இயக்கப்பட்டன. திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட ஆந்திரா மாநிலத்துக்கு வழக்கம்போல் பஸ்கள் சென்றன.
இதேபோல் திருவண்ணாமலையிலும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ, பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.