செய்திகள்

சென்னை காவல் துறையில் ரோபோ போலீஸ் அறிமுகம்

Published On 2019-01-08 20:40 GMT   |   Update On 2019-01-08 20:40 GMT
சென்னை காவல் துறையில் ‘ரோபோ’ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார். #ChennaiPolice #Robot
சென்னை:

சென்னை காவல் துறைக்கு புத்தாண்டு வரவாக ‘ரோபோ’ போலீஸ் அறிமுகமாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், அவர்களுக்கு துணையாக கம்ப்யூட்டர் ஞானமுள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சேர்ந்து இந்த ‘ரோபோ’ போலீசை உருவாக்கியுள்ளனர்.

நேற்று இந்த ‘ரோபோ’ போலீஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக பார்வையிட்டார்.

போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.

சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி பயிற்சி கொடுக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கான பூங்கா உள்ளது. சோதனை அடிப்படையில் இந்த ‘ரோபோ’ போலீஸ் சிறுவர்-சிறுமிகளுக்கான போக்குவரத்து பூங்காவில் முதன்முதலில் தனது பணியை தொடங்குகிறது.

விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கும். சிறுவர்-சிறுமிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை சொல்லி கொடுக்கும் நிகழ்ச்சியில் ‘ரோபோ’ போலீஸ் தனது ஆரம்பகட்ட பணியை தொடங்குகிறது. இதில் எந்தளவுக்கு ‘ரோபோ’ போலீஸ் வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை பொறுத்து, அடுத்தக்கட்டமாக போக்குவரத்து போலீசில் இந்த ‘ரோபோ’ போலீசுக்கு பணி கொடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ‘ரோபோ’ போலீசை வடிவமைப்பதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகி உள்ளதாக தெரிகிறது.
Tags:    

Similar News