செய்திகள்

எச்ஐவி ரத்தம்: விசாரணை அறிக்கை கிடைத்ததும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2019-01-05 08:53 GMT   |   Update On 2019-01-05 09:35 GMT
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை அறிக்கை கிடைத்ததும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #HIVBlood
சென்னை:

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்கள் பேசினார்கள்.

வி.பி.பரமசிவம் (அ.தி.மு.க.):- 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட நிகழ்வு இதுபோல் இனி வேறு எங்கும் நடைபெறக் கூடாது. இந்த தவறுக்கு அரசு நிர்வாகம் காரணமா? அல்லது தனிப்பட்ட நபர்களின் கவனக்குறைவு காரணமா? என்னைப் பொறுத்தவரை லேப் டெக்னீசியன் மற்றும் கண்காணிப்பாளரின் குறைபாடுகளால் நடந்திருக்கலாம் என கருதுகிறேன்.

ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. 8 லட்சம் பேர் ரத்த தானம் செய்கிறார்கள். இதில் பரிசோதனை செய்கிற ‘கிட்’டில் குறை இருக்குமோ? என்ற ஐயப்பாடு எழுகிறது. இதே போன்ற ஒரு நிகழ்வு கேரளாவிலும் நடந்துள்ளது.

இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க.):- கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட வி‌ஷயத்தில் எங்கே தவறு நடந்துள்ளது என்பதை அரசு தீவிரமாக ஆராய்ந்து இனி வரும் காலங்களில் தவறு ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதில் ரத்தம் கொடுத்த அந்த நபர் மனசாட்சி உள்ளவராகவே தெரிகிறது. ஏனென்றால் அவரே முன் வந்து தனது ரத்தத்தில் எச்.ஐ.வி. உள்ளதாக தனியார் ஆய்வகத்தில் கூறி இருக்கிறார். எனவே எனது ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று தானே ஆஸ்பத்திரிக்கு வந்து சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகுதான் வி‌ஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. அவரைப் பற்றிய செய்தியும், படமும் வெளியே வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். அவருக்கு தகுந்த கவுன்சிலிங் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வி‌ஷம் குடித்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இப்போது அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அது போக போகத்தான் தெரியும்.

இந்த பெண் வாழ்நாள் முழுவதும் எச்.ஐ.வி. பாதித்த பெண்ணாகதான் இருப்பார். சமுதாயத்தில் அவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். மற்றவர்கள் வேலை கொடுக்க கூட யோசிப்பார்கள். எனவே அரசு உரிய நிவாரணம் வழங்கி தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):- இதில் தவறு செய்ததாக லேப் டெக்னீசியன் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்து கூறியதாவது:-

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட வி‌ஷயம் தெரிந்ததும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். அரசு செயலாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டோம்.

அதில், எச்.ஐ.வி. ரத்தம் வழங்கியவர் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பும் ரத்தம் கொடுத்து இருந்தவர். அவருக்கு எச்.ஐ.வி. இருந்தது தெரிந்தும் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் பெங்களூரில் இருப்பதாக தகவல் தெரிவித்து விட்டார்.

அதன் பிறகு அவரை தொடர்ந்து கண்காணிக்க முடியாமல் போனதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் லேப் டெக்னீசியன் உள்பட 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தனர். அதன் பிறகு நிரந்தரமாக இப்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் யார் யாரெல்லாம் கண்காணிக்க தவறினார்கள் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் மாதவி தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவர் விரைவில் அறிக்கை தருவார். அதில் தவறு இழைத்தவர்கள் உயர்பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்கள், நர்சு என யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

தற்போது கர்ப்பிணி பெண்ணுக்கு 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இனி இது போன்று தவறு ஏற்படாமல் இருக்க ரத்த பரிசோதனையை துல்லியமாக கண்டுபிடிக்கும் வகையில் ரூ.2 கோடி மதிப்பில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புதிய மருத்துவ கருவி நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் ‘ஐ.டி. நாட்’ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.



மு.க.ஸ்டாலின்:- இதில் கீழ்மட்ட ஊழியர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் விஜயபாஸ்கர்:- விசாரணை குழுவின் அறிக்கை கிடைத்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். #MinisterVijayabaskar #HIVBlood

Tags:    

Similar News