செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

Published On 2019-01-03 16:33 GMT   |   Update On 2019-01-03 16:33 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaStorm
நாகப்பட்டினம்:

நாகையில் கடந்த 22-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் நாகை - நாகூர் மெயின் ரோட்டில் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணை தலைவர் அமிர்தம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகை மாலி, நகர செயலாளர் பெரியசாமி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கஜா புயலால் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு ரூ. 50 ஆயிரமும், பகுதியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரமும், அனைத்து வீடுகள், நிலங்கள், பயிர்களுக்கு முழுவதுமாக இழப்பீடு வழங்கவேண்டும். கஜா புயல் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த காத்திருப்பு போராட்டத்தின் காரணமாக நாகை - நாகூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. #GajaStorm
Tags:    

Similar News