செய்திகள்

ரூ. 65 கோடி வங்கி கடனை செலுத்தாததால் 25 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

Published On 2019-01-03 11:31 GMT   |   Update On 2019-01-03 11:31 GMT
ரூ. 65 கோடி கடன் தொகை செலுத்தாததால் 25 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்களுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பல்லடம்:

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, மதுரை, ராஜபாளையம், அருப்புக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5.75 லட்சம் விசைத்தறி உள்ளது.

இதனால் 11 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகைய விசைத்தறிகளை விசைத்தறியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வங்கிகளில் கடன் பெற்று நடத்தி வருகிறார்கள்.

விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் வழங்கும் பாவு நூலை கொண்டு துணியாக உற்பத்தி செய்து கொடுத்து அதற்கு மீட்டர் கணக்கில் கூலி பெற்று வருகின்றனர்.

வருவாய் இழப்பு, மின் கட்டண செலவு அதிகரிப்பு, தொழிலாளர் சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட நிர்வாக செலவுகளால் விசைத்தறியாளர்கள் கடந்த 4 ஆண்டாக நஷ்டமடைந்து வந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை விற்பனை செய்து கடனை அடைத்து உள்ளனர்.

கடன் தொகை செலுத்தாததால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளுக்கு வங்கிகள் சீல் வைத்துள்ளது. இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் கடன் தொகை ரூ. 65 கோடி வராக்கடனாக உள்ளது.

இதனால் 25 ஆயிரம் விசைத்தறிகளை சீல் வைக்க போவதாக வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி, செயலாளர் அப்பு குட்டி என்கிற பால சுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது-

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளது. பனியன் தொழிலுக்கு பின் விசைத்தறி தான் முக்கிய தொழிலாக உள்ளது. கோவை மாவட்டத்தில் சோமனூரிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்திலும் ஏராளமான விசைத்தறிகள் இயங்கி வருகிறது.

இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து உள்ளது. நூல் விலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

3 வருடத்திற்கு ஒரு முறை கூலி உயர்வு காரணமாக உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒப்பந்தபடி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்கவில்லை.

ஒரு சில உற்பத்தியாளர்கள் தான் கொஞ்சம், கொஞ்சமாக வழங்கி வருகிறார்கள். தற்போது விசைத்தறி தொழிலும் சரியில்லை. இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் வங்கியில் கடன் வாங்கி உள்ளனர்.

இதற்காக வங்கிகள் ஜப்தி நோட்டீஸ் வழங்கி உள்ளது. விசைத்தறியை விற்று தான் கடனை செலுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது நவீன உற்பத்திக்கு மாறி விட்டதால் பழைய விசைத்தறிகளை அடிமாட்டு விலைக்கு தான் விற்க வேண்டிய நிலை உள்ளது.

வங்கி கடன் தொடர்பாக ஒரு சில விசைத்தறியாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ. 65 கோடியை அரசே மானியமாக வழங்கி விசைத்தறியாளர்களையும், விசைத்தறி தொழிலையும் காப்பாற்ற வேண்டும்.

இது தொடர்பாக சென்னையில் கைத்தறி துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவதற்காக இன்று சென்னையில் முகாமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News