செய்திகள்

வடகிழக்கு பருவமழை முடிந்தது - சென்னை ஏரிகளில் தண்ணீர் இல்லை

Published On 2019-01-03 09:41 GMT   |   Update On 2019-01-03 09:41 GMT
வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் சென்னை ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வரும் மாதங்களில் சென்னை நகர மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் சூழல் உருவாகி உள்ளது. #Northeastmonsoon
சென்னை:

தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். கடந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கியது.

வழக்கமாக பருவமழை காலத்தில் தமிழகம் - புதுச்சேரியில் 441 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 337 மில்லி மீட்டர் மழை தான் பெய்துள்ளது. இது இயல்பைவிட 24 சதவீதம் குறைவாகும்.

இந்த காலக்கட்டத்தில் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 59 சதவீதம் குறைவாகும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் - புதுச்சேரியில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மழை பெய்வதற்கான சூழ்நிலையும் இல்லாமல் இருந்தது.

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை ஜனவரி 2-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக சென்னை வானிலை மையம் அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறும்போது, ‘‘தமிழகம், புதுச்சேரி, கேரளா, தெற்கு ஆந்திரா, தென் கர்நாடகத்தின் உட்பகுதி, ராயலசீமா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 2-ந் தேதியுடன் முடிவடைந்தது.

எனவே தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஓட்டி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

தமிழகத்தின் உட்பகுதியில் மூடுபனியும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் உரை பனியும் நிலவக்கூடும்’ என்று தெரிவித்தார்.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் லூபன், தித்லி, கஜா, வெய்ட்டி ஆகிய 4 புயல்கள் உருவானது. இதில் கஜா புயலால் மட்டுமே தமிழகத்துக்கு ஓரளவு மழை கிடைத்தது. மற்ற புயல்கள் தமிழகத்தை ஏமாற்றின.

சென்னையில் எதிர்பார்த்த மழை இல்லாததால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை.

இன்றைய நிலவரப்படி 4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 1376 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. (4 ஏரிகளிலும் 11 ஆயிரத்து 25 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்க லாம்) கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஆயிரத்து 938 மி.கன அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வரும் மாதங்களில் சென்னை நகர மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் சூழல் உருவாகி உள்ளது. #Northeastmonsoon

Tags:    

Similar News