செய்திகள்

நாமக்கல்லில் கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கிய வியாபாரி

Published On 2019-01-02 12:20 GMT   |   Update On 2019-01-02 12:20 GMT
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளதையடுத்து நாமக்கல்லில் கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கறிக்கடை வியாபாரி டிபன் பாக்ஸ் வழங்கியுள்ளார். #PlasticBan
நாமக்கல்:

நாமக்கல்லில் கறிக்கோழிக் கடை வைத்து நடத்தி வருபவர் புவனேஸ்வரன் (வயது 56).

நேற்று 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது.

இதனை வரவேற்று புவனேஸ்வரன் தனது கடையில் இறைச்சி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கி வருகிறார். இதற்காக அவர் கடையில் நிறைய டிபன் பாக்ஸ்கள் விலைக்கு வாங்கி வைத்துள்ளார்.

இன்று அவர் பாத்திரங்கள் கொண்டுவராத வாடிக்கையாளர்களிடம் ரூ.50 பெற்றுக் கொண்டு இந்த டிபன் பாக்ஸ்களில் இறைச்சி வைத்து கொடுத்து அனுப்பினார்.

பின்னர் திரும்ப வந்து டிபன் பாக்ஸை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி வாடிக்கையாளர்கள் அந்த டிபன் பாக்ஸை திரும்ப கொண்டு வந்து புவனேஸ்வரனிடம் கொடுத்தனர். பின்னர் அவர் ரூ.50 யை அந்த வாடிக்கையாளிடமே திரும்ப கொடுத்தார்.

இது குறித்து புவனேஸ்வரன் கூறியதாவது:-

இதே பகுதியில் நான் 29 வருடங்களாக கறிக்கடை வைத்து நடத்தி வருகிறேன்.

அரசு அறிவித்துள்ள ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற திட்டத்தை வரவேற்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நான் டிபன் பாக்ஸ் வழங்குகின்றேன்.

இந்த திட்டம் வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
Tags:    

Similar News