செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை: ஷீலா பாலகிருஷ்ணன்- சாந்த ஷீலா நாயருக்கு சம்மன்

Published On 2018-12-30 11:07 GMT   |   Update On 2018-12-30 11:07 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் சாந்த ஷீலா நாயர் ஆகியோர் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital

சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

விசாரணை கமி‌ஷனில் வாக்குமூலம் அளித்த பலரும் சசிகலாவுக்கு எதிராகவே கூறியதாக தகவல்கள் வெளிவருகிறது.

சசிகலா தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் என 13 பேர்களிடம் சசிகலாவின் வக்கீல் 3-ந் தேதி குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.

விசாரணை ஆணையத்தில் திடீர் திருப்பமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் வக்கீல்களும் இப்போது குறுக்கு விசாரணை செய்ய உள்ளனர்.

ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த சாந்த ஷீலா நாயர், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் வருகிற 2-ந் தேதி அப்பல்லோ வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த ஆணையத்தில் அனுமதி வாங்கி உள்ளனர்.

இந்த விசாரணையில் ஆஜராக இருவருக்கும் ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர்தான் அரசின் முடிவுகள் குறித்து முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடத்தியவர்கள் என்பதால் இவர்கள் இருவரிடமும் ஆணையம் மீண்டும் சில விளக்கங்களை பெற விரும்புகிறது.

இதற்காக ராம மோகன ராவ் மற்றும் ராதாகிருஷ்ணன் எதிர் மனுதாரராக சேர்க்க கோரி கமி‌ஷன் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக விவாதித்த விசயங்களை ஆணையம் முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புவதால் இவர்களிடம் ஆணையம் மேலும் சில விளக்கங்களை கேட்ட உள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital

Tags:    

Similar News