செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தமிழக அரசை கவர்னர் கலைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Published On 2018-12-25 05:13 GMT   |   Update On 2018-12-25 05:13 GMT
உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தமிழக அரசை கவர்னர் கலைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #AnbumaniRamadoss

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக ஆளுனர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசை கலைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் தான் கஜா புயல் மீட்பு பணிகள் தாமதமடைகின்றன. இதை பயன்படுத்தி அரசு அலுவலர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது. தமிழக மக்களுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் கோவில்களில் நடந்த சிலை முறைகேடு குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் சிறப்பாக செயல்படுகிறார். அந்த வழக்கை நீர்க்கச் செய்யும் வகையில் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழக அரசு லஞ்சம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே தாமிர தொழிற்சாலை தமிழகத்தில் வேண்டாம் என்று அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி மக்களை பீதியடையச் செய்யும் வெடிச்சத்தம் குறித்த அச்சத்தைப் போக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss

Tags:    

Similar News