செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பள்ளி மாணவன் பலி

Published On 2018-12-24 06:20 GMT   |   Update On 2018-12-24 06:20 GMT
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை பரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகன். இவரது மகன் சுரேந்தர் (வயது 18) 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

நாகனும் அவரது மகன் சுரேந்தரனும் சபரிமலை அய்யப்பன் கோவில் செல்வதற்காக மாலை அணிந்திருந்தனர். அவரது வீட்டில் இன்று கன்னி பூஜை நடக்க இருந்தது.

இதற்காக ஏடூரில் வசிக்கும் தனது சகோதரியை அழைப்பதற்காக நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

மோட்டார் சைக்கிளை சுரேந்தர் ஓட்டிச் சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் அபியும், ஏடூரைச் சேர்ந்த தமிழரசு என்பவரும் உடன் சென்றனர்.

3 பேர் சென்ற மோட்டார் சைக்கிள் எளாவூரில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த சிமெண்ட் தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவர் சுரேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மற்ற 2 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News