செய்திகள்

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

Published On 2018-12-21 11:16 GMT   |   Update On 2018-12-21 11:16 GMT
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Prapanchan
சென்னை:

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  
இது தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:-

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி:-


எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கிரண்பேடி, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்:-

தனித்துவமான தமிழ் நடையால் பல படைப்புகளை வழங்கி வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :-

தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை அனைத்திலும் தடம் பதித்தவர். வானம் வசப்படும் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவரது இழப்பு தமிழ் எழுத்துலகிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:-

தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனித்துவமாகத் திகழ்ந்த எழுத்தாளர்-நாடக ஆசிரியர் பிரபஞ்சன்  உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று எழுத்துப்பணியை திறம்பட செய்து வந்த பிரபஞ்சனின் மறைவு எழுத்துலகுக்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்!

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  #Prapanchan
Tags:    

Similar News