செய்திகள்

பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஊர்வலம்

Published On 2018-12-19 18:15 GMT   |   Update On 2018-12-19 18:15 GMT
பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஊர்வலம் சென்று மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் மனுவை அளித்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அதிகாரிகள் அனைவருக்கும், ஒரே அரசாணை மூலம் மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். தங்களது அலுவலகங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கணினி வழிச்சான்றிதழ்கள், இணையதள பணிகளுக்கான செலவின தொகை மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும். அடங்கல் சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரி டிஜிட்டல் கையொப்பமிட்டு வழங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த மாதம் ( நவம்பர்) 28-ந் தேதி முதல் ஆன்லைன் சான்றிதழ் பதிவு செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா, காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நேற்று கோரிக்கை விளக்க ஊர்வலம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் புறநகர் பஸ் நிலையம், பாலக்கரை வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மனுவை மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் அளித்தனர்.
Tags:    

Similar News