செய்திகள்

கஜா புயலால் 150 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு- மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் மரணம்

Published On 2018-12-19 10:47 GMT   |   Update On 2018-12-19 10:47 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய கஜா புயல் தாக்கியதில் 150 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. இதனால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். #gajacyclone

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). விவசாயியான இவர் 200 செம்மறி ஆடுகளை பராமரித்து வந்தார். கடந்த மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயலின் போது 125-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.

இதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டும், தினந்தோறும் ஆடுகள் உயிரிழந்து வந்தன. தற்போது சுமார் 50 ஆடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

எஞ்சிய ஆடுகளுக்கும் ரத்த சோகை மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தினமும் கால்நடை மருத்துவர் மூலம் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கும், சத்தான தீவனம் வாங்கி கொடுக்கவும், தினமும் அதிகமான தொகை செலவிடப்பட்டதால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிரமப்பட்டு வந்தார்.

மேலும் இறந்த ஆடுகளுக்கான நிவாரண தொகையை அரசு உடனே வழங்க வேண்டுமென வருவாய்த் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களை ராஜேந்திரன் வலியுறுத்தி வந்தார். ஆனால் ஆடுகளுக்கான நிவாரணத்தை அரசு இதுவரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆடுகள் உயிரிழந்ததால் மிகவும் சோகத்துடன் இருந்து வந்த ராஜேந்திரன் நேற்று திடீரென மாரடைப்பால் மரண மடைந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, செம்மறி ஆடுகள் மீது அளவற்ற பாசம் கொண்டவர் ராஜேந்திரன்.

அவரது குரலுக்கும் சைகைக்கும் கட்டுப்பட்டு ஆடுகள் நடந்து கொள்ளும். புயலால் ஒரே நேரத்தில் 125 ஆடுகள் இறந்தன. அதன் பிறகு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 ஆடுகள் இறந்து விட்டன.


அரசு நிவாரணம் அளித்தாலாவது எஞ்சிய ஆடுகளை காப்பாற்றி விடலாம் என தினமும் புலம்பி வந்தார். 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை இழந்த சோகத்தோடும், தினமும் இறக்கும் ஆடுகளை அடக்கம் செய்து வந்த தாலும் மனமுடைந்திருந்த ராஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்றனர்.

இது குறித்து கால்நடை மருத்துவர் சேக்தாவுத் கூறும்போது, இறந்த ஆடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து தேவையான சான்றுகளுடன் நிவாரண தொகைக்காக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். #gajacyclone

Tags:    

Similar News